இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் சின்ன மூப்பன்பட்டி கிராமம் கருப்பசாமி நகரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ரோசல்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகுமுத்து என்பவரின் மகன் கார்த்திக் ராஜா, மதியழகன் என்பவரின் மகன் முருகன், சக்கரை என்பவரின் மனைவி ஜக்கம்மாள் மற்றும் கெப்பிலிங்கம்பட்டி செல்வகுமரேசன் என்பவரின் மகன் சூரியா ஆகிய நான்கு பேர் மழையின் காரணமாக ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதைபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது பிச்சமுத்து என்பவரின் மனைவி ஜெயக்கொடி, தென்கீரனூர் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கள்ளக்குறிச்சி மாவட்டம் பண்ருட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இரண்டு பேர் இடி, மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரமான செய்திகளைக் கேட்டு மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.