சென்னை: போரூரில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து...!
சென்னை, போரூரில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் எலக்ட்ரிக் பைக் தீப்பிடுத்து எரிவதும், வெடித்து சிதறுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. பெட்ரோலுக்கு மாற்றான எலெக்ட்ரிக் வாகனங்கள் பலர் வாங்க நினைத்து வரும் நிலையில் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்து வரக்கூடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் திடீரென் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஷோரூமின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் கரும் புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
உடனே சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பைக்குகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாடிக்கையாளர் வாகனத்திற்கு சார்ஜ் செய்யும் போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.