அதிமுக உட்கட்சி தேர்தலில் அடிதடி - நிர்வாகி மண்டை உடைப்பு...!
திருவாலங்காடு ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா முன்னிலையில் நிர்வாகிகள் மோதல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டிக்கு விருப்ப மனு அளிக்கும் நிகழ்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் திருவாலங்காடு பகுதியில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு கொட்டாமேடு கோபால கிருஷ்ணன் என்பவர் பணம் செலுத்த வந்த போது தற்போதைய ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவரும் அவருடன் இருந்தவர்கள் கோபால கிருஷ்ணனை கடுமையாக தாக்கினர். மண்டபத்தில் இருந்த நாற்காலியை எடுத்து சக்திவேல் ஆதரவாளர்கள் கோபால கிருஷ்ணனை தாக்கினர். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காயமடைந்த கோபால கிருஷ்ணனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோபால கிருஷ்ணனை மீண்டும் வந்து ஒன்றிய செயலாளர் பதவிக்கு மனு அளித்தார்.
ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டிக்கு விருப்ப மனு அளிக்க வந்தவர் மீது தாக்குதல் நடைபெற்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.