புதுச்சேரி தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.59 லட்சம் மானியம்
தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 91 ஆயிரம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 91 ஆயிரம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு மானியம்
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும், ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டில் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி உதவித் தொகையாகவும், உற்பத்திக்கு பிந்தைய மானியமாகவும், தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் மூலமாக புதுச்சேரியை சேர்ந்த தோட்டக்கலை விவசாயிகளுக்கு ரூ.58 லட்சத்து 91 ஆயிரத்து 414 மானியமாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை மற்றும் சாகுபடிக்கு பிந்தைய மானியம் வழங்குதல், ஆடிப்பட்டம் 2021-22-ம் ஆண்டு மரவள்ளி சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதுதவிர 2021-22-ம் ஆண்டு தென்னை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட் டுள்ளது.
தென்னந்தோப்பு புனரமைப்பு
முதிர்ந்த மற்றும் நோய் தாக்கிய தென்னை மரங்களை அகற்றி புதிய கன்றுகளை நட்டு பழைய தோப்புகளை புனரமைத்தல், பராமரித்தல் ஆகிய திட்டங்களுக்காக 1,697 பயனாளிகளுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்கள் மூலம் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் 1,697 பயனாளிகளுக்கு பழப்பயிர்கள், கலப்பின காய் கறிகள், நாட்டுக்காய்கறிகள், குளிர்கால காய்கறிப்பயிர்கள், மரவள்ளி மற்றும் தென்னை சாகுபடியின் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் பொருட்டும் தோட்டக்கலை பயிர் சாகுபடி பரப்பளவை விரிவுபடுத்தும் பொருட்டும் இந்த மானிய தொகை வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.