தொழிலாளி வெட்டிக்கொலை: தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-04-12 01:18 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள கலங்காதகண்டி வடக்கு தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் கனகராஜ் (வயது 29), செங்கல் சூளை தொழிலாளி. இவர் அதே ஊரைச் சேர்ந்த ராஜ் (81), அவரது மகன் துரை (49) ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக அதன் உரிமையாளரிடம் இருந்து ரூ.10,000 வாங்கி கொடுத்தார்.

ஆனால், இந்த பணத்தை வாங்கிய 2 பேரும் வேலைக்கு செல்லவில்லை. இதையடுத்து அவர்களிடம் கனகராஜ், வேலைக்கு செல்லாவிட்டால் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வெட்டிக் கொலை

இந்த நிலையில் கடந்த 31-10-2012 அன்று இரவில் கனகராஜ் தனது வீட்டின் முன்பு மனைவியுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அங்கு ராஜ், துரை ஆகியோர் வந்தனர். கனகராஜை அவர்கள் அவதூறாக பேசியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராஜ், கனகராஜை பிடித்துக் கொள்ள துரை அரிவாளால் வெட்டினார். அங்கு இருந்தவர்களிடம் யாரும் பக்கத்தில் வந்தால் உங்களையும் வெட்டிக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தில் வெட்டுக்காயம் அடைந்த கனகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும், பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் அதாவது 1-11-2012 அன்று கனகராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ், துரை ஆகியோரை கைதுசெய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தென்காசி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா குற்றவாளிகளான ராஜ், அவரது மகன் துரை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஓர் ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக துரைக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலுச்சாமி ஆஜரானார்.

மேலும் செய்திகள்