ரூ.534 கோடியில் தரமான குடிநீர் வினியோகம் குறித்து ஆலோசனை
நகரப்பகுதியில் ரூ.534 கோடியில் தரமான குடிநீர் வினியோகம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி நகரப்பகுதியில் குடிநீர் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ஒப்புதலோடு பிரான்ஸ் நாட்டு அரசு வங்கியிடம் இருந்து ரூ.534 கோடி பெற்று நகரப்பகுதியில் தரமான குடிநீர் வினியோகிக்க திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது அவர், புதுவை நகரப்பகுதியில் தரமான குடிநீர் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் பிரான்ஸ் நாட்டு துணை தூதர் லிசே டால்போட் பரே, திட்ட இயக்குனர் (ஏ.எப்.டி.) புருனே பொத்லே, திட்ட அதிகாரி பியர்ட் கார்லே, டெல்லி திட்ட மேலாளர் அங்கித் துளசியன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர்கள் முருகானந்தம், சுந்தரமூர்த்தி, ஸ்மார்ட் சிட்டி இயக்குனர் (டெக்னிக்கல்) ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.