கன்னியகோவிலில் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த அரசு பஸ்
கன்னிய கோவிலில் தடுப்புச் சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது. அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாகூர்
கன்னிய கோவிலில் தடுப்புச் சுவரில் மோதி அரசு பஸ் கவிழ்ந்தது. அடிக்கடி நடக்கும் விபத்துக்களால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
சென்னையில் இருந்து டெல்டா மாவட்டங்களான கடலூர், நாகை, திருவாரூர் செல்வதற்கான முக்கிய சாலையாக புதுச்சேரி -கடலூர் சாலை உள்ளது. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த தேசிய நெடுஞ்சாலை பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் போடப்பட்ட நிலையில் இந்த சாலை தற்போது குண்டும் குழியுமாக கிடக்கிறது. பிரதிபலிப்பான், எல்லைக் கோடுகள், எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் இந்த பகுதியில் விபத்துகள் அதிகம் நடந்து வருகின்றன.
இந்த சாலையில் கடந்த 3 மாதத்தில் மட்டும் சுமார் 100 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலை துறையோ அல்லது போக்குவரத்து போலீசாரோ இதனை கண்டுகொள்வதாக தெரியவில்லை.
தடுப்பில் மோதி கவிழ்ந்தது
கன்னியக்கோவில் பகுதியில் சாலைக்கு நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுவரில் இரவு நேரத்தில் வாகன மின் விளக்குகளில் ஒளிரும் பிரதிபலிப்பான் மற்றும் எச்சரிக்கை பலகை இல்லை. அப்பகுதியில் போதிய மின்விளக்கு வெளிச்சம் இல்லாததால் இருசக்கர வாகனம் முதல் பஸ், லாரி, கார் என பல வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ் எதிர்பாராதவிதமாக கன்னியகோவிலில் சாலை நடுவே தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி தடுப்புக் கட்டைகளை கிரேன் மூலம் சரி செய்தனர்.
மேலும் 2 ராட்சத கிரேன் களை வரவழைத்து கவிழ்ந்த பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த பகுதியில் இதுபோன்ற தொடர் விபத்துகள் நடந்து வருவதால்அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.