அழகுநிலைய உரிமையாளரிடம் நூதனமாக 10 பவுன் நகை திருட்டு

துணி தைக்க ஆர்டர் வாங்கி தருவதாக நம்ப வைத்து அழகு நிலைய உரிமையாளரிடம் 10 பவுன் நகை திருடிய மர்ம பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-11 13:29 GMT
புதுச்சேரி
துணி தைக்க ஆர்டர் வாங்கி தருவதாக நம்ப வைத்து அழகு நிலைய உரிமையாளரிடம் 10 பவுன் நகை திருடிய மர்ம பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நைசாக பேசி...

புதுச்சேரி சண்முகாபுரம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரவணபவன். இவரது மனைவி லட்சுமி (வயது 43). இவர் அழகு நிலையம் நடத்தி வருவதுடன் பெண்களுக்கு விதவிதமான டிசைன்களில் ஜாக்கெட் தைத்து கொடுக்கிறார். 
இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் அவரது அழகு நிலையத்திற்கு வந்து கால் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை சரி செய்யுமாறு கூறினார். 
அதற்கு சிகிச்சை அளித்த போது லட்சுமியிடம் அந்த பெண் நைசாக பேச்சு கொடுத்தார். பின்னர் அவரிடம், நான் ஒரு அமைப்பில் வேலை செய்து வருகிறேன். அந்த அமைப்பு சார்பில ஏழை மக்களுக்கு நிறைய துணிகள் தைப்பார்கள். நான் அதன் நிர்வாகியிடம் கூறி இலவச தையல் மிஷன் மற்றும் நிறைய ஆர்டர் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்கு லட்சுமி சம்மதம் தெரிவித்தார்.

10 பவுன் நகை திருட்டு

அப்போது நான் உடனடியாக அந்த நிர்வாகியை இங்கே வர சொல்கிறேன். அவர் இங்கு வரும் போது நீங்கள் தங்க நகைளை அணிய வேண்டாம். அதனை கழற்றி வையுங்கள் என்று கூறினார். 
இதையெல்லாம் உண்மை என்று நம்பிய லட்சுமி தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை கழற்றி மேஜை டிராயரில் வைத்தார். அப்போது அந்த பெண் செல்போனில் பேசியபடியே திடீரென அந்த நிர்வாகி வந்து விட்டார். நான் அவரை தெருமுனைக்குச் சென்று அழைத்து வருகிறேன் என்று கூறி சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த லட்சுமி சிறிது நேரம் கழித்து தனது மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை காணாமல் திடுக்கிட்டார். அப்போது தான் அழகு நிலையத்துக்கு வந்த பெண் நம்ப வைத்து நகையை நூதனமாக திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். 
மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்