மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல் 4 பேருக்கு வலைவீச்சு

மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-04-11 13:12 GMT
பாகூர்
மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மதுக்கடையில் தகராறு

கிருமாம்பாக்கம் அடுத்த மதிகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வீரப்பன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் தனது நண்பர் ஜெயமூர்த்தி (30)யுடன்  முள்ளோடையில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்றார். 
அங்கு உச்சிமேட்டை சேர்ந்த வாலிபர்கள் வழியில் இடையூறாக நின்றனர். அவர்களை வழிவிடுமாறு வீரப்பன் கூறியும், அவர்கள் வழிவிடவில்லை. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்து கலைந்துபோக செய்தனர். 

தாக்குதல்

இந்த நிலையில்  இரவு வீரப்பனும், ஜெயமூர்த்தியும்  உச்சிமேடு செல்லும் பாதையிலுள்ள பாலத்தின் அருகே உட்கார்ந்திருந்தனர். அப்போது மதுக்கடையில் தகராறு செய்த உச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வந்த வழியாக வந்தனர். அவர்கள் முன்விரோதத்தை மனதில் கொண்டு வீரப்பன், ஜெயமூர்த்தியை கல் மற்றும் உருட்டுகட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் வீரப்பன், ஜெயமூர்த்தி ஆகியோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பாகூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த நிலவேந்தன், ராக்கி என்கிற ராஜேஷ், பிரபாகரன், சுகன்ராஜ் ஆகிய 4 பேரும் சேர்ந்து வீரப்பனையும் அவரது நண்பரையும் தாக்கியது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சமரச பேச்சுவார்த்தை

இந்த சம்பவத்தால் மதிகிஷ்ணாபுரம், ஊச்சிமேடு கிராமத்துக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் ஆகியோர் மதிகிருஷ்ணாபுரம் கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இரு கிராமங்களிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்