ஏ.ஆர். ரகுமானின் கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழகத்தில் இரு மொழி கொள்கை மற்றும் ஏ.ஆர். ரகுமானின் கருத்து பற்றிய செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்து பேசினார்.
சென்னை,
நாடாளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 37வது கூட்டம் அதன் தலைவர் மற்றும் உள்துறை மந்திரியான அமித்ஷா தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதில் துணைத்தலைவர் பிரிதகரி மக்தாப் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, இந்தி மொழியை வளர்ப்பது குறித்து விளக்கினார்.
இது தொடர்பாக பேசிய அவர், “நாட்டின் ஒற்றுமையின் முக்கிய அங்கமாக அலுவல் மொழியை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பிற மொழிகளை பேசும் மாநில குடிமக்கள் தங்களுக்குள்ளே உரையாடும் மொழி, இந்திய மொழியாகவே இருக்க வேண்டும்.
இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாக ஏற்க வேண்டும், மாறாக உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வாக மாற்றாவிட்டால், அது பரவாது. மத்திய மந்திரி சபையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல்கள் தற்போது இந்தியில்தான் தயாரிக்கப்படுகின்றன.
நாட்டின் 8 வடகிழக்கு மாநிலங்களில் 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். வடகிழக்கை சேர்ந்த 9 பழங்குடி இனங்கள் தங்கள் பேச்சுவழக்கு எழுத்துகளை தேவநாகரிக்கு மாற்றியுள்ளனர். 8 வடகிழக்கு மாநிலங்களும், தங்கள் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க ஒப்புக்கொண்டு உள்ளன” என்று அமித்ஷா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புரட்சி கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கருத்து தெரிவித்துள்ளார். இதன்படி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற கவிதையில் வரும், ‘இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற வரிகளை ஏ.ஆர். ரகுமான் சுட்டிக்காட்டி பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகளை தாங்கிய போட்டோ ஒன்றை ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருக்கிறார். அதில் 'ழ' கரத்தை தாங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' என்றும், புரட்சிக்கவிஞரின் பாடல் வரிகளும் அதில் இடம்பெற்றன.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவகலத்தில் கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் இரு மொழி கொள்கை குறித்தும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் கருத்து குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.
அவர் கூறும்போது, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழும், ஆங்கிலமும்தான். இந்திக்கு இடமில்லை என்று கூறியுள்ளார். அந்த வகையில், இன்றைக்கு கூட ஊடகங்களை பார்க்கும்போது ஏ.ஆர். ரகுமான் நல்ல விசயங்களை கூறியுள்ளார்.
அதில், தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது ஒரு நல்ல கருத்து. தமிழ் எல்லாவற்றிலும் மேலோங்கி, உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடியாக இருக்க கூடிய காரணத்தினால், தமிழ்தான் இணைப்பு மொழியே ஒழிய, மற்ற மொழிகள் எதுவும் இணைப்பு மொழி கிடையாது என்று கூறியுள்ளார்.