ஆளுநர்களுக்கு பதிலாக பல்கலை கழகங்களின் வேந்தர்களாக முதல்-அமைச்சர்களை நியமிக்க வேண்டும்; ஜவாஹிருல்லா பேச்சு

ஆளுநர்களுக்கு பதிலாக மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக, முதல்-அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

Update: 2022-04-11 11:49 GMT


சென்னை,



தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் அண்ணா கலையரங்கத்தில் கடந்த மார்ச் 30ந்தேதி நடந்தது.

விழாவுக்கு பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கினார்.  விழாவில் மொத்தம் 282 பட்டதாரிகளுக்கு பட்டங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. கல்வித்தகுதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்காக 101 பதக்கங்கள் மற்றும் விருதுகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி பேசும்போது, இன்றைய தினம் உலக அளவில் இந்தியா வெற்றிநடை போடுகிறது. எப்போதும் தேசிய பார்வையை மனதில் கொண்டிருக்க வேண்டும். பிராந்திய அளவில் இல்லாமல் தேசிய உணர்வுடன் சிந்தித்து செயல்படுவது அவசியம். பிராந்திய அளவில் ஏற்படும் முன்னேற்றம் சமவளர்ச்சியை தராது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. பிராந்திய வளர்ச்சி நாட்டுக்கு உகந்ததாக இருக்காது. அது ஏற்றத்தாழ்வையே ஏற்படுத்தும். அடிப்படை தேவைகளான உணவு, உறைவிடம், சுகாதாரம், கல்வி, எரிசக்தி அனைத்தும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கிடைக்க வேண்டும். அது பிராந்தியம் சார்ந்ததாக இருக்கக்கூடாது.

உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்திய பாரம்பரியம். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா பொருளாதார ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும், ராணுவ வலிமையிலும் முன்னணியில் திகழ வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்று அவர் பேசினார்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா கூறும்போது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சரே நியமிக்க வேண்டும்.  ஆளுநர் நியமனம் செய்யும் முறையை மாற்ற வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் மாணவர்களிடம் மாநில உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி பேசி வருகிறார்.  ஆளுநர்களுக்கு பதிலாக மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக, முதல்-அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்