கோவையில் பயங்கரம்: பிறந்தநாள் வாழ்த்து கூறாத டிரைவருக்கு அடி, உதை..!
பேரூர் அருகே பிறந்தநாள் வாழ்த்து கூறாததால், டிரைவரை அடித்து உதைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம், புள்ளாக் கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 26). சரக்கு வாகன டிரைவராக வேலை பார்க்கிறார். இவர் நரசீபுரம் அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த நரசீபுரம், காமாட்சி அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 27) என்பவர் பிரேம்குமாரின் வாகனத்திற்கு எதிரே தனது பைக்கை நிறுத்தியுள்ளார். பிரேம்குமாரிடம் தன்னுடன் வந்த அருண்குமார் என்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுமாறு கூறியுள்ளார்.
அதற்கு பிரேம்குமார் அவர் யார் என்றே தெரியாது என்று கூறி விட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆவேசமடைந்த ஹரிபிரசாத் பைக்கில் தனது நண்பருடன் பிரேம்குமார் வாகனத்தை பின்தொடர்ந்து முன்னால் சென்று குறுக்கே பைக்கை போட்டு வழி மறுத்துள்ளார்.
மேலும் பிரேம்குமாரை, தகாத வார்த்தையால் திட்டி, அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது, பிரேம்குமார் நெற்றியில் வாகனத்தின் டோர் பட்டு ரத்தக் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில், ஹரிபிரசாத்தை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர்.