பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்
குயிலாப்பாளையத்தில் சிங்கார வேல் முருகன் கோவிலில் 3 பக்தர்களுக்கு மிளகாய்பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது.
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையத்தில் சிங்கார வேல் முருகன் கோவில் உள்ளது. இங்கு 32-ம் ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினமும் இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இன்று காலை அபிஷேக ஆராதனைகள், காவடி ஊர்வலம் மற்றும் பக்தர்கள் அலகுகுத்தி கொண்டு கார், டிராக்டர் ஆகியவற்றை இழுத்தனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பக்தர்களுக்கு மிளகாய்பொடி கரைசல் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர் ஒருவரின் மார்பில் உலக்கை வைத்து மஞ்சள் இடித்தல் நிகழ்ச்சியும், இரவு தீமிதித்தலும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.