கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி

புதுச்சேரியில் இன்று கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி நடந்தது. தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

Update: 2022-04-10 16:48 GMT
புதுச்சேரியில் இன்று கிறிஸ்தவர்களின் குருத்தோலை பவனி நடந்தது. தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
தவக்காலம்
இயேசு சிலுவையில் பாடுபட்டு மரித்த காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பது வழக்கம். அதன்படி கடந்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது.
இயேசு     சிலுவையில் அறையப்பட்டதற்கு முன்பு, ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அப்போது வழிநெடுகிலும் இருந்த மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா, ஓசன்னா என்று கீதம் பாடினர். இதனை நினைவு படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி கடைப்பிடிக்கப்படுகிறது.
குருத்தோலை பவனி
அதன்படி இன்று குருத்தோலை ஞாயிறு என்பதால், புதுச்சேரி ரெயில் நிலையம் எதிரே உள்ள தூய இருதய ஆண்டவர் தேவாலயம், ஜென்மராக்கினி தேவாலயம், புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம், தூய யோவான் ஆலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடந்தது.
பங்குதந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
காரைக்கால்
காரைக்கால் புனித தேற்றரவு அன்னை ஆலயம், கோட்டுச்சேரி தூய சகாய அன்னை ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களிலும்  குருத்தோலை பவனி நடந்தது. 

மேலும் செய்திகள்