ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் ..!
கோடைகாலம் தொடங்கியதை அடுத்து ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி:
சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் மலைப்பிரதேசமான ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர். வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் மோட்டார் படகுகள் மற்றும் அதிவேக படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி சூட்டிங்மட்டம் சுற்றுலா தலம், அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கண்ணாடி மாளிகையில் காட்சிக்கு வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், கள்ளி செடிகள் கண்ணாடி மாளிகை, இலை பூங்கா, அலங்கார செடிகளை பார்வையிட்டனர்.
இதுதவிர ஊட்டி படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. கோடை சீசன் தொடங்கி உள்ளதால் வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வந்த மலை ரெயிலில் 230 இருக்கைகளும் நிரம்பி வழிந்தது. மலை ரெயிலில் பயணிக்கும் போது குகைகள், பசுமையான தேயிலை தோட்டங்கள், மலைகளை மோதிச் செல்லும் மேகக் கூட்டங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி ரெயில் நிலையத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி என்ஜினை பார்வையிட்டனர்.