மீனவர்கள் அனைவருக்கும் சாட்டிலைட் போன் வழங்கப்படும் - அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மீனவர்கள் அனைவருக்கும் சாட்டிலைட் போன் வழங்கப்படும் என்று அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2022-04-10 00:27 GMT
1,145 டாக்டர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் நேற்று மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:- கால்நடைத்துறையில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க 10 தினங்களில் 1,145 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கடலில் எல்லை தெரிவது இல்லை. இதனால் மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே இலங்கைக்கு செல்வதில்லை. சில நேரம் காற்று இழுத்து செல்கின்றது. அதனால் அவர்கள் கைதாகின்றனர். அதனை தடுக்கும் வகையில் வெளியுறவுத்துறை மற்றும் பிரதமரிடம் முதல்-அமைச்சர் எடுத்துக்கூறி மீன் பிடிப்பதற்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களுக்கு சாட்டிலைட் போன்

தமிழகத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் சாட்டிலைட் போன் விரைவில் வழங்கப்படும். கால்நடைகளுக்கான தீவனங்கள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் தீவனங்கள் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. பசுமை தீவனங்கள் அரசு நிலங்களிலும் தனியார் நிலத்திலும் தயாரிக்கப்படும். கால்நடை பண்ணைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்ற புகார் இருந்தால் உடனடியாக அதைக்கூறினால் சரி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நாகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கடலில் கூண்டு கட்டி அதில் மீன் வளர்த்து அதை ஏற்றுமதி செய்யும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.


மேலும் செய்திகள்