போலீஸ்காரரின் வீட்டில் நகை, பணம் திருட்டு
புதுச்சேரியில் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரரின் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
புதுச்சேரியில் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரரின் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றனர்.
காவலர் குடியிருப்பு
புதுச்சேரி கோரிமேட்டில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்கு ஐ.ஆர்.பி.என். ஏட்டு அன்பரசன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் அவரது மனைவிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. எனவே அவர் பாகூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டில் அன்பரசன் மட்டும் தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி அன்பரசன் விடுமுறை எடுத்து மனைவி, குழந்தையை பார்க்க பாகூருக்கு சென்றார். இன்று காலை அன்பரசன் வீட்டு கதவு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் கொடுத்தனர்.
நகை, பணம் திருட்டு
இதையடுத்து அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் நாலாபுறமும் சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த 4 கிராம் தங்க நகை, ரூ.15 ஆயிரம், 4 பட்டுப்புடவைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து அன்பரசன் அளித்த புகாரின்பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுவை காவலர் குடியிருப்பில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரரின் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.