மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் சம்பளத்துடன் மளிகை பொருட்கள் - 29 பெண்களிடம் மோசடி
கடலூரில் மாதந்தோறும் சம்பளத்துடன் மளிகை பொருட்கள் தருவதாக கூறி ரூ.5¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம், வடலூர் அருகே உள்ள கல்குணத்தை சேர்ந்த பாலசந்திரன் மனைவி விஜயலட்சுமி (வயது 30) மற்றும் 28 பெண்கள் இன்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், வடலூர் குமரன் நகரில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தின் நிர்வாகி வெற்றிச்செல்வன் மற்றும் பவானி, தமிழ்ச்செல்வம் ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் ரூ.6,750 மற்றும் ரூ.10 ஆயிரம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் சம்பளம் மற்றும் போனசாக மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தினர். அதன்பேரில் நாங்கள் 29 பேரும் சுமார் ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 240 வரை செலுத்தினோம்.
ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் தங்களுக்கு பணம் கொடுக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் கேட்டதற்கு, அவர்கள் எங்களை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். அதனால் அவர்களை கைது செய்து, தங்களது பணத்தை மீட்டு தரவேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், இதுதொடர்பான மனு மீது வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கிழக்கு சேப்ளாநத்தத்தை சேர்ந்த ஜீவரத்தினம் மகன் வெற்றிச்செல்வன், பவானி, தமிழ்செல்வம் ஆகியோர் மீது வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பவானி, தமிழ்செல்வம் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.