கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை அளிக்க 389 நடமாடும் மருத்துவமனைகள்

தொலைதூர கிராமங்களில் மருத்துவ வசதியை மேம்படுத்த 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-08 23:30 GMT
சென்னை,

ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் அங்கேயே சென்று நோய்களை கண்டறிந்து, அதற்கான சிகிச்சை அளித்திட 2007-ம் ஆண்டு 100 மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு, கருணாநிதியால் 100 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டது. மேலும் 2008-ம் ஆண்டு 285 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டு மொத்தம் 385 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.

ஒரு மருத்துவக் குழுவில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு ஓட்டுனர், ஒரு துப்புரவு பணியாளர் பணியமர்த்தப்பட்டு தொலைதூர கிராமங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே தேவையான மருத்துவ வசதி அளிக்க முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.

நடமாடும் மருத்துவக்குழு

சிறந்த தாய்-சேய் நலன், காசநோய்க்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு ஒரு வட்டாரத்தில் 40 முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு, அதிக தற்காலிக குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய், காசநோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்துக்கான மருந்துகளும் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில், 2021-22-ம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கையில், "தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூ.70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஒரு வாகனத்துக்கு தலா ரூ.18 லட்சம் செலவில் தமிழ்நாட்டில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு ரூ.70.02 கோடி நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை சென்னை அண்ணா சதுக்கம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்