மாயமான கல்லூரி மாணவிகள் 2 பேர் சென்னையில் மீட்பு... தோழியை திருமணம் செய்ய ஆணாக மாற சென்றது அம்பலம்

பெரம்பலூர் அருகே மாயமான கல்லூரி மாணவிகள் 2 பேரை போலீசார் சென்னையில் மீட்டனர். தோழியை திருமணம் செய்ய ஆணாக மாற சென்றது விசாரணையில் தெரியவந்தது.

Update: 2022-04-08 12:26 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவிகள், 2 பேர் ஒரே கல்லூரியில் முதலாமாண்டு வெவ்வேறு பாடப்பிரிவில் படித்து வருகின்றனர். அவர்கள் 2 பேரும் பள்ளி படிப்பு படிக்கும் போது, ஒன்றாக படித்து வந்ததால் நெருங்கிய தோழிகள் ஆனார்கள். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி காலை அவர்கள் 2 பேரும் தங்களுடைய வீட்டில் உள்ளவர்களிடம் கல்லூரிக்கு, சென்று வருவதாக கூறி விட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தனர். ஆனால் கல்லூரி முடிந்தும், இரவு நீண்ட நேரமாகியும் அவர்கள் 2 பேரும் தங்களது வீடுகளுக்கு மீண்டும் திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், அவர்களின் பெற்றோர்கள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவிகளை யாரேனும் கடத்தி சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்த நிலையில் காணாமல் போன கல்லூரி மாணவிகள் சென்னையில் ஒரு வீட்டில் இருப்பதாக பெரம்பலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அந்த கல்லூரி மாணவிகளை நேற்று மீட்டு பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர்.

கல்லூரி மாணவிகள் மீட்டு வந்தது தொடர்பாக விசாரணையில் அதிர்ச்சியான தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். காணாமல் போன கல்லூரி மாணவிகள் சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லவில்லை. அதில், ஒரு மாணவி பெண்ணுக்குரியகுணாதிசயங்கள் இல்லாமல் ஆண்களை போல் கையில் காப்பு போடுவதும், பூ, பொட்டு வைக்காமல் இருப்பதும், ஆண்கள் அணிகின்ற காலணியை அணிவதும், தலைமுடியை ஆண்கள் போல் அலங்கரிப்பதுமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த மாணவி சம்பவத்தன்று அதே கிராமத்தை சேர்ந்த ஒரு ஆண் நபரிடம் தனது செல்போனை கொடுத்து விட்டு, அவரது செல்போனை வாங்கி கொண்டு சென்றுள்ளார். இந்த நிலையில் சந்தேகமடைந்த அந்த ஆண் நபர் சம்பவத்தன்று இரவே மாணவிகளின் தோழி வீட்டிற்கு சென்று செல்போனை ஒப்படைத்து விட்டு, மேற்படி அவர்கள் 2 பேரும் சென்னைக்கு சென்று விட்டதாக கூறி விட்டு சென்றார்.

அந்த மாணவியின் செல்போனில் இருந்த புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேற்படி காணாமல் போன 2 கல்லூரி மாணவிகளும் சென்னையில் ஒரு பகுதியில், ஒரு நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று அவர்களை மீட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்கள் 2 பேரில், பெண்ணுக்குரிய குணாதிசயங்கள் இல்லாத மாணவி, தனது தோழியுடன் பள்ளி படிப்பில் இருந்து  தற்போது வரை அவருடன் ஒன்றாக இருந்து வருகிறார். 

திருமண வயது எட்டினால் தங்களை வெவ்வேறு இடத்தில் பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுத்து விடுவார்கள். இதனால் நாங்கள் பிரிந்து விடுவோம் என்று எண்ணி அந்த மாணவி, தனது தோழியை திருமணம் செய்வதற்காக தன்னை ஆணாக மாற்றி கொள்வதற்காக, அவர்கள் 2 பேரும் சென்னை சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தற்போது அந்த மாணவிகளுக்கு குழந்தைகள் நல குழுவினர் மனநல ஆலோசனைகளை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்