மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்த நித்தியானந்தா..!
மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கைலாசாவில் இருந்து இணையதள வாயிலாக நித்தியானந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் கைலாசாவில் இருந்து இணையதள வாயிலாக நித்தியானந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
நித்தியானந்தா
திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூரை சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் நித்யானந்தா தியான பீடம் வாயிலாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஆன்மீக சொற்பொழிவு சத்சங்கம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தின் சைவ மடங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் நித்தியானந்தா மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்த நிலையில் தனது சீடர்களுடன் கைலாசா என்ற புது நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்தின் மாடாதிபதி காலமான பின்பு தன்னையே மதுரையின் 293-வது மடாதிபதி” என்று நித்யானந்தா அறிவித்து கைலாசாவில் பதவி பிரமாணமும் எடுத்துக் கொண்டார்.
கைலாசாவில் சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா அறிவிப்பு வெளியானது முதல் கைலாசாவில் ஆன்மீக நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மீனாட்சி அம்மன் கோலத்தில் நித்யானந்தா இருப்பது போன்ற படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரம் அருகே நித்யானந்தாவின் சியாமளா பீடம் ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த ஆசிரமத்தில் நித்யானந்தா கைலாசாவில் இருந்தபடி சித்திரை திருவிழாவை நேரடியாக பார்க்க வசதியாக, நேரலை வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. “நான் சித்திரை திருவிழாவில் பங்கேற்று உள்ளதை பொதுமக்கள் பார்வைக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டும்” என்று நித்யானந்தா அறிவுறுத்தி உள்ளார்.அதன்படி ஆசிரம வளாகத்தில் பிரத்தியேக கணினி திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை மீனாட்சி தரிசனம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சொக்கநாதர் கயிலாய வாகனத்திலும், மீனாட்சி காமதேனு வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். அப்போது சியாமளா பீடம் ஆசிரமம் சார்பில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பட்டாடைகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன் பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து நித்யானந்தா உத்தரவின்படி ஆசிரமம் சார்பில் அறுசுவை உணவுகள் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.