பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-07 22:18 GMT
சென்னை,

இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார்.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, ஊடகபிரிவு தலைவர் கோபண்ணா, பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. மோடி அரசாங்கம் நினைத்தால் இதை கட்டுப்படுத்த முடியும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாவுக்கு ரூ.108 டாலராக இருந்தபோது பெட்ரோல்-டீசலுக்கு மானியம் வழங்கி ரூ.50-க்கு ஒரு லிட்டர் இந்தியாவில் விற்பனை செய்தார். ஆனால் இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை பீப்பாவுக்கு ரூ.50 ஆக உள்ளது. அதைப்போல் செயல்பட்டால் தற்போது இந்தியாவில் பெட்ரோல்-டீசலை லிட்டர் ரூ.30-க்கு விற்பனை செய்ய முடியும்.

இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகளும், தவறான பொருளாதார கொள்கையுமே காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் திரவியம், சிவராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், டெல்லி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்