ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கி சாதனை: முதல்-அமைச்சர் தலைமையில் விழா

தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு லட்சம் மின்சார இணைப்புகளை வழங்கி சாதனை படைத்ததையொட்டி விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 16-ந் தேதி விழா நடக்கிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

Update: 2022-04-06 18:51 GMT
சென்னை,

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கி சாதனை படைத்த மின்சார வாரிய அனைத்து பிரிவு பொறியாளர்கள், அதிகாாிகள் மற்றும் பணியாளர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து ஒரு லட்சம் இணைப்பு வழங்கியதை கொண்டாடும் வகையில் வெற்றி விழா நடத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

விவசாயிகள் கவுரவிப்பு

பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின்சார இணைப்புக்காக கடந்த 20 ஆண்டுகளாக பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு லட்சம் விவசாய மின்சார இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 6 மாத காலத்துக்குள் ஒரு லட்சம் மின்சார இணைப்புகளும் வழங்கப்பட்டு விட்டன.

அதாவது, கடந்த மாதம் 29-ந் தேதி ஒரு லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு லட்சம் விவசாயிகளையும் சிறப்பிக்கின்ற வகையில், சென்னையில் வாரிய தலைமை அலுவலகத்தில் நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 16-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மத்தியில் காணொலி காட்சி மூலம் விவசாயிகளை கவுரவிக்கும் வகையில் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இதற்காக, மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்று விவசாயிகளுக்கு மின்சார இணைப்பு அட்டைகளை வழங்க உள்ளார்.

30 சதவீதம் அதிகம் உற்பத்தி

நிலக்கரி பற்றாக்குறை உள்ள போதிலும், அனல்மின்சார நிலையங்களில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 30 சதவீதம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2020-2021-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 553 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரத்தை மின்சார வாரியத்தின் சொந்த அனல்மின் நிலையங்கள் உற்பத்தி செய்துள்ளன. 2021-2022-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 391 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. அதாவது, கூடுதலாக 4 ஆயிரத்து 837 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

கோடை மின்சார தேவையை சமாளிப்பதற்காக 3 ஆயிரத்து 527 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக 3, 5 மற்றும் 25 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், மத்திய அரசு 48 ஆயிரம் முதல் 50 டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரியை வழங்குகிறது.

தேவை அதிகரிப்பு

கூடுதல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து 4.80 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளன. சில இடங்களில் மின்சார வெட்டு ஏற்படுவதாக சிலர் சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற புகார்களை பரப்பி வருகின்றனர்.

பொதுவாக, இதுபோன்று புகார் தெரிவிப்பவர்கள் தங்களது மின்சார இணைப்பு எண்ணையும் சேர்த்து தெரிவிக்க வேண்டும். இதன் மூலம், புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.

இந்த ஆண்டு தினசரி மின்சார தேவை 17 ஆயிரத்து 196 மெகாவாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் தினசரி மின்சார தேவை 18 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. அத்தேவையையும் பூர்த்தி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

மின்சார புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், நுகர்வோர்கள் வாட்ஸ்-அப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்