இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய 32 மீனவர்கள்...!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 32 தமிழகம் மீனவர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர்.
ஆலந்தூர்,
தமிழக கடல் எல்லையில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மீன் பிடித்த 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த மீனவர்களின் குடும்பத்தினர், மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் முயற்சிகளால் தமிழக மீனவர்கள் 34 பேரும் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு இலங்கையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது .
அதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இலங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மற்ற 32 மீனவர்களும் இலங்கையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தனா். அவர்களை தமிழக மீனவர்கள் நலத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு தனித்தனி வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.