சென்னையில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.12½ கோடி சுருட்டிய மோசடி ராணி கைது

சென்னையில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.12½ கோடி சுருட்டிய மோசடி ராணி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-04-05 23:08 GMT
சென்னை,

கைது செய்யப்பட்ட மோசடி ராணியின் பெயர் சுனிதா (வயது 34). சென்னை போரூரைச் சேர்ந்தவர். பி.எஸ்சி. நர்சிங் பட்டதாரி. கணவர் பெயர் ரஞ்சித்குமார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. குறுகிய காலத்தில் பணக்கார அந்தஸ்தை பெற சுனிதா ஆசைப்பட்டார். அதற்கு எளிதான வழி ஒன்றைக் கண்டுபிடித்தார். நல்ல லாபகரமான தொழில் நிறுவனங்களை நடத்துவதாக இவர் தன்னைத்தானே விளம்பரப்படுத்தி கொண்டார். அதை நம்பவைக்க மிகவும் ஆடம்பரமாக உலா வந்தார். தன்னை ஒரு பெண் தொழில் அதிபர் போல சித்தரித்தார். ஆனால் இவர் நடத்தியதாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்கள் போலியானவை.

தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதை பல மடங்காக திருப்பித்தருவதாக சொல்லி பல பேரை சுனிதா ஏமாற்றினார். இவருடைய மோசடி வித்தையை நம்பி ஏமாந்தவர் பட்டியலில் முக்கியமானவர் சீனிவாசன். தொழில் அதிபரான இவர், சவூதி அரேபியாவில் பல்வேறு நிறுவனங்களை நடத்திவருகிறார்.

கொரோனா காலத்தில் இவர் சென்னைக்கு வந்து தங்கினார். இந்த சந்தர்ப்பத்தில் சென்னையில் ஏதாவது தொழில் தொடங்க சீனிவாசன் ஆசைப்பட்டார். அவரது ஆசையை தெரிந்துகொண்ட சுனிதா, நண்பர் ஒருவர் மூலம் சீனிவாசனிடம் அறிமுகமானார். சுனிதாவின் அசத்தல் பேச்சை உண்மை என்று நம்பிய சீனிவாசன், சுனிதா சொன்ன போலி நிறுவனங்களில் கோடிகளை முதலீடாக கொட்டினார். கொட்டிய பணம் வங்கிகள் வாயிலாக கொடுக்கப்பட்டது.

ரூ.12½ கோடி சுருட்டல்

சுனிதாவின் போலி கம்பெனிகளில் ரூ.12½ கோடி அளவுக்கு சீனிவாசன் முதலீடு செய்தார். 36 பவுன் நகைகளையும் சுனிதா வாங்கியதாக தெரிகிறது. ஆனால் இந்த பணத்தையும், நகைகளையும் சுனிதா அப்படியே சுருட்டிவிட்டார். சீனிவாசன் கொடுத்த பணத்தை பலமடங்காக திருப்பித்தருவதாக சொன்ன சுனிதா, கொரோனாவை காரணம் காட்டி நஷ்டக் கணக்கு காட்டி ஒரு சிறுதொகைகூட திருப்பிக்கொடுக்கவில்லை. கொரோனாவின் கடுமை தணிந்தபிறகும் சுனிதா ஒன்றும் இல்லை என்றே கைகளைப் பிசைந்தார். அதன்பிறகுதான் சுனிதாவின் மோசடி நாடகம் அம்பலமானது.

சீனிவாசனைப் போல நிறைய பேரிடம் அவர் கோடிகளை முதலீடாகப் பெற்று மோசடி லீலைகளில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது. தொழில் ஆர்வத்தில் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்த சீனிவாசன், சுனிதா மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

சுனிதா கைதானார்

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சுனிதா மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான் விக்டர், சப்-இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணை தொடங்கியவுடன் சுனிதா திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.

போலீசார் தேடிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். மோசடி பணத்தை சுனிதா என்ன செய்தார் என்று போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். அவருக்கு ஒரு சொந்த வீடு இருப்பதாகவும், அதுவும் கடனுக்கு அடமானத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மோசடி பணத்தை சுனிதாவிடம் இருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். சுனிதாவிடம் ஏமாந்தவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்