கல்லூரி மாணவி தற்கொலை; ஒருவார கால போராட்டத்திற்குப் பிறகு உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள்

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறவினர்களின் போராட்டம் ஒரு வாரத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது.

Update: 2022-04-05 14:34 GMT
நாகை,

நாகை மாவட்டம் நாகூரை சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித்தொழிலாளியான இவரது மகள் சுபாஷினி(வயது 19). நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோதெரபி முதலாம் ஆண்டு படித்து வந்த சுபாஷினி, கடந்த 30 ஆம் தேதி, அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரியின் பருவ கட்டணம் செலுத்தாததால், மாணவியை வகுப்பறையின் வெளியில் நிற்க வைத்தததாகவும், இதனால் அவமானம் அடைந்து சுபாஷினி தற்கொலை செய்து கொண்டதாகவும் மாணவியின் பெற்றோர், நாகூர் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் நாகூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கல்லூரி தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு பொறுப்பாளர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் மாணவி சுபாஷினி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்த ஒரு வார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கீழ்வேலூர் எம்.எல்.ஏ. நாகை மாலி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து ஒருவார கால போராட்டம் முடிவுக்கு வந்தது. மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள், நாகையில் இருந்து நாகூர் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். 

மேலும் செய்திகள்