கோவிலில் பிரசாதம் தரமறுத்த பூசாரியை கத்திரிக்கோலால் குத்திய நாட்டாமை....!
லால்குடி அருகே கோவில் பூசாரியை கத்திரிகோலால் குத்திய நாட்டாமையை போலீசார் கைது செய்தனர்.
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 63). இவர் மங்கம்மாள்புரம் வடுகநாச்சியம்மன் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் 20-ம் தேதி வடுகநாச்சியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஊர் நாட்டாமைக்கு கோவில் பிரசாதம் கொடுப்பது வழக்கம்.
இந்த நிலையில் அன்று நாட்டாமைக்கு பிரசாதம் கொடுக்கவில்லை என்று கூறுப்படுகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த நாட்டாமை அன்பழகன் பூசாரியிடம் தகராறு செய்து உள்ளார்.
அப்போது விழா குழுவினர் நாட்டாமையை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆத்திரம் தீராத நாட்டாமை அன்பழகன் நேற்று இரவு 11 மணி அளவில் பூசாரி தர்மராஜ் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த பூசாரி தர்மராஜின் தலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்திரிகோலால் நாட்டாமை அன்பழகன் குத்தி உள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பூசாரி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர், அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இதுகுறித்து அறிந்த லால்குடி போலீசார் நாட்டைமை அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.