ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்!

இலங்கை சிறையில் உள்ள படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்.

Update: 2022-04-04 00:25 GMT
கோப்பு படம்
ராமேசுவரம், 

ராமேசுவரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை வன்மையாக கண்டிக் கிறோம். 

அதுபோல் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மேலும் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு கடலில் மூழ்கி முழுமையாக சேதமான 125 படகுகளுக்கு தலா ஒரு படகிற்கு ரூ.5 லட்சம் தமிழக அரசால் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதில் ராமேசுவரத்தை சேர்ந்த 4 விசைப்படகுகளின் பெயர் விடுபட்டு உள்ளது. எனவே இந்த 4 விசைப்படகுகளும் சேர்த்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்