415 பள்ளிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுமா? - இன்று முக்கிய ஆலோசனை
தொடர் அனுமதி பெறாமல் செயல்படும் 415 பள்ளிகள் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுமா என்பது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடக்க உள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது. இதில் கல்வித்துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
குறிப்பாக, பள்ளிகளில் சேதம் அடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களில் இடிக்கப்பட்டவை எவை, இன்னும் இடிக்கப்பட வேண்டியவை எவை என்பது குறித்தும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்கள் அங்கீகாரத்தை புதுப்பிக்காததற்கு காரணம் என்ன என்பது பற்றியும், பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக வந்த புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் பேசப்பட உள்ளது.
மேலும் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் 390 நர்சரி, பிரைமரி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் 25 பள்ளிகள் என மொத்தம் 415 பள்ளிகள் தொடர் அனுமதி பெறாமல் செயல்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர் அனுமதி பெறாமல் செயல்படும் பள்ளிகள், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படாது. அந்த வகையில் இந்த 415 பள்ளிகள் தொடர் அனுமதி பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது பற்றி இன்றைய கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.