சிறுவன் உயிரிழந்த சம்பவம்: நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு கல்வித்துறை உத்தரவு
வேன் மோதி பள்ளி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கடந்த 28 ஆம் தேதி காலை, பள்ளி பேருந்து மோதியதில் அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர் தீக்சித் உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக, விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் பூங்காவனம் (வயது 60) மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி (34) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளியின் முதல்வர் தனலட்சுமி ஆகிய 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் 24 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கள் மீது எந்த தவறும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இந்த விபத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு தான் முழுமையான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதோடு போக்குவரத்து குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.