வன்னியர்கள் இடஒதுக்கீடு வழக்கை தமிழக அரசு கோர்ட்டில் சரியாக நடத்தவில்லை: எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டம் என்பதால், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கை கோர்ட்டில் சரியாக நடத்தவில்லை என்று தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

Update: 2022-04-02 21:59 GMT
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு

அ.தி.மு.க. சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை சரியான முறையில் இயற்றி, நடைமுறைக்கு கொண்டு வந்தோம். அதை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வக்கீலை கொண்டு வாதிடவில்லை. சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு வந்தபோது, மூத்த வக்கீலை வைத்து வாதாடவில்லை. அம்பா சங்கர் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக சரியான தரவுகள் கொடுக்கப்படவில்லை என்றே கூறியிருக்கிறார். இது அரசு மீது தானே தவறு.

எது எதுக்கோ, மூத்த வக்கீல் வைக்கிறார்கள். இது மிகப்பெரிய பிரச்சினை. இதற்கு தீர்வு காணவேண்டும் என்றால், ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேண்டுமென்றே திட்டமிட்டு இதை நிறைவேற்றக்கூடாது என்ற அடிப்படையில் மூத்த வக்கீலை வைத்து கோர்ட்டில் வாதாடாத காரணத்தினால்தான் இந்த தவறு. இந்த விஷயத்தில் அரசு கோட்டைவிட்டு வந்து இருக்கிறது. நிறைவேற்றக்கூடாது என்று ஆசைப்பட்டார்கள்.

கோர்ட்டில் சரியாக நடத்தவில்லை

எந்த அரசாங்கம் வந்தாலும் ஒரே அதிகாரிகள்தான். முறையாக மூத்த வக்கீலை வைத்துதான் சட்டத்தை தயாரித்து, இடஒதுக்கீட்டை அறிவித்தோம். ஐகோர்ட்டு மதுரை கிளையில் அதற்கான முழு தரவுகளை தாக்கல் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும்போது, அந்த தரவுகளை வைத்துதான் வழக்கை விசாரிப்பார்கள். வழக்கு நடக்கும்போது அதற்குண்டான விவரங்களை கொடுத்தால்தான் வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சரியான தரவுகளை கொடுக்காததால்தான் இந்த நிலைமை. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்ததை ரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கில்தான் அரசு இந்த வழக்கை கோர்ட்டில் சரியாக நடத்தவில்லை.

மூத்த வக்கீல்களை கொண்டு இதை மறுபரிசீலனை செய்வதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார். ஏன் முன்பே அதை செய்திருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காதே?. நீதி கிடைத்து இருக்குமே. இதேபோல், அரசு சரியாக கையாளவில்லை என்றால், 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கும் ஆபத்து ஏற்படும். இடையூறு வரும். அமைச்சர் இலாகா மாற்றப்பட்டது வெறும் கண்துடைப்பே. சமூக நீதிக்கு பாடுபடுகிறோம் என்று சொல்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பட்டியலினத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரியை சாதி சொல்லி அமைச்சர் திட்டியிருக்கிறார். இதுதான் சூப்பர் முதல்-அமைச்சர் ஆட்சியின் நிர்வாகம்?.

செயலிழந்த அரசு

எங்கு பார்த்தாலும் 3 மாதங்களாக கூட்டு பாலியல் பலாத்காரம் தமிழகத்தில் நடக்கிறது. இந்த அரசாங்கம் அதை தடுக்க தவறிவிட்டது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது. 10 மாத கால ஆட்சியை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. உறுப்பினராக சசிகலா இல்லை. இதுதொடர்பாக சென்னை கமிஷனரிடம் புகார் கூறியிருக்கிறோம். அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பு தொடங்கிவிடும். இது வாடிக்கை. ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனதும் நில அபகரிப்பு என்ற தனிப்பிரிவை உருவாக்கி, பறிக்கப்பட்ட நிலங்களை எல்லாம், மீட்டெடுத்து உரியவர்களுக்கு கொடுத்தார். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுமே அப்பாவி நிலங்களை அபகரிக்கும் காட்சியை பார்க்கிறோம். பல வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. இது செயலிழந்த அரசு என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.'

‘கோ பேக் மோடி’

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர், உள்துறை, பாதுகாப்புத்துறை, நிதி, நெடுஞ்சாலைத்துறை மந்திரியை பார்த்து இருக்கிறார். தமிழ்நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை பெறுவதை வரவேற்கிறோம். ஆனால் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் பிரதமர் மோடி, தமிழ் மண்ணுக்கு வரும்போது, அனைவரும் வரவேற்று தான் பழக்கம். அந்த நாகரிகம் தி.மு.க.வுக்கு கிடையாது. பிரதமர் வரும்போது ‘கோ பேக் மோடி' என்று முழக்கமிட்டவர் தான் மு.க.ஸ்டாலின், இப்போது அவரை சந்தித்து வந்திருக்கிறார். பிரதமரை கொச்சைப்படுத்தும் அளவுக்கு, அரசியல் நாகரிகம் தெரியாதவர் ஸ்டாலின் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்