வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை
பெரிய கொழுவாரி சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக முற்றுகையிட்ட கிராம மக்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மோகன் கூறினார்.
பெரிய கொழுவாரி சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக முற்றுகையிட்ட கிராம மக்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மோகன் கூறினார்.
வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பெரிய கொழுவாரி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை ஒப்படைக்க உள்ளார். இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுதொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் பெரிய கொழுவாரி கிராமத்தில் நேற்று காலை நடப்பதாக இருந்தது. இதற்காக வந்த வானூர் தாசில்தார் உமா மகேஸ்வரன், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், நரசிம்மன் ஆகியோரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அதிகாரிகள் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
புகார் அளித்தால் நடவடிக்கை
இதைத்தொடர்ந்து இன்று மாலை மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. அப்போது கிராம மக்கள் சமத்துவபுரத்தில் வீடுகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வீடு இல்லாதவர்களுக்கு சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு பதிலளித்து கலெக்டர் மோகன் பேசுகையில், சமத்துவபுரத்தில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் எழுத்துப் பூர்வமாக புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திட்ட இயக்குனர் சங்கர், கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.