மின்கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு எதிர்ப்பு
மின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.மின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மின் கட்டண உயர்வுக்கு அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கட்டண உயர்வு
மின்கட்டண உயர்வில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுவை மாநில மக்களை மின்துறை மூலம் ஏமாற்றி உள்ளது. மின்கட்டண உயர்வு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி காணொலி காட்சி வாயிலாக கருத்துகேட்பு கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது 200 யூனிட் வரையிலான மின்சாரத்துக்கு மட்டும் கட்டணத்தை உயர்த்தியும் மற்றவர்களுக்கு கட்டண உயர்வு இல்லை என்றும் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது.
அப்போதே கட்டண உயர்வினை அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்த்தனர். இந்தநிலையில் புதிய மின் கட்டண உயர்வை மின்துறை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே அறிவிக்கப்படாத 201 முதல் 300 யூனிட் வரை ரூ.4.65-லிருந்து ரூ.5 எனவும், 300 யூனிட்டுக்கு மேல் ரூ.6.05-லிருந்து ரூ.6.45 எனவும் கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதம்
மேலும் வீட்டு இணைப்புக்கு நிரந்தர கட்டணமாக கிலோவாட்டுக்கு மாதம் ரூ.45 என்ற இருந்ததை ஒவ்வொரு கிலோ வாட்டுக்கும் தனித்தனியாக மாதம் ரூ.30 என நிர்ணயித்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 2 ஏ.சி. உள்ள வீடுகளுக்கு நிரந்தர கட்டணமாக மாதம் ரூ.50-க்கும் மேல் வசூலிக்கப்படும். அறிவிக்கப்படாமல் இவ்வாறு கட்டணத்தை உயர்த்தி இருப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். அட்டவணை அறிவிப்பில் இல்லாத பயனாளிகளுக்கும் கட்டண உயர்வு என்பது சட்டவிரோதமான செயலாகும்.
இந்த கட்டண உயர்வின் மூலம் தற்போது இருப்பதைவிட இருமடங்கு கட்டணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும். தலைமை செயலாளர், மின்துறை செயலாளர், மின்துறை உயர் அதிகாரிகளின் சட்டவிரோதமான தன்னிச்சையான மின் கட்டண உயர்வின் அறிவிப்பை முதல்-அமைச்சர் ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அன்பழகன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் சலீம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மின்கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களின் பிரதிநிதிகள் அனைவரும் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.
பொதுமக்களின் ஆட்சேபனையை பொருட்படுத்தாமல் நுகர்வோர் கருத்துகேட்பு கூட்டம் ஒரு சடங்காக நடத்திவிட்டு மின் கட்டணம் உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மக்கள் நலனை காக்க வந்த அரசு என்று சொல்லும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. அரசு அவசியமே இல்லாமல் மின் கட்டணத்தை ஏற்றியிருக்கிறது. பொதுமக்களுக்கு மிகவும் சுமையாக மாறும் இந்த மின் கட்டண உயர்வினை உடனே குறைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.