டீசல் விலை உயர்வு - போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்....!
டீசல் விலை உயர்வை கண்டித்து போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆரணி,
தமிழ்நாடு ரிக் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தப்பட்டு வருகிறது. தற்போது டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொழில் செய்ய முடியாத நிலைக்கு ரிக் உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர்.
டீசலுக்கு ஜி.எஸ்.டி. 18 சதவீத வரியிலிருந்து 5 சதவீத வரிக்கு உட்படுத்த வேண்டும். டீசலை ரிக் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும். ரிக், போர்வெல் கட்டணத்தை அடிக்கு 15 ரூபாய் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சேவூர் பைபாஸ் சாலையில் அனைத்து போர் வெல் லாரிகளையும் ஒன்றாக நிறுத்தி வைத்து மத்திய அரசை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.