முசிறி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சோகம்...!
முசிறி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளிடம்,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்த ராஜா-வனிதா தம்பதியினரின் மகள் வேதவர்ஷினி( வயது 6). இவர் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
சிறுமி வேதவர்ஷினி இன்று விடுமுறை தினம் என்பதால் வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இரும்பு கம்பியினால் ஆன துணை மின் கம்பத்தை பிடித்து உள்ளார்.
அப்போது அந்த கம்பத்தில் பாய்ந்த மின்சாரம் சிறுமி வேதவர்ஷினியை தாக்கி உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி வேதவர்ஷினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார், சிறுமி வேதவர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.