நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் - விஜயகாந்த்
நூல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரும் மையமாகவும் சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருப்பூர் விளங்குகிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 விழுக்காட்டிற்கும் அதிகமாக திருப்பூரில் தான் தயாராகின்றன.
ஆனால், அந்தத் தொழிலை முடக்கும் வகையில் பின்னலாடைகளின் முக்கிய மூலப் பொருளான நூலின் விலை அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு ரூ. 230 க்கு விற்பனையான நூல் விலை கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 160 வரை உயர்ந்துள்ளது. இதுபோன்ற சூழலில் தற்போது அனைத்து ரக நூல்களில் விலையும் கிலோவிற்கு 30 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ரகங்களின் அடிப்படையில் நூல்களின் விலை தற்போது ரூ. 365 முதல் ரூ. 435 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே நூல் விலை உயர்வால் திருப்பூரில் 50 சதவீதம் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் மீண்டும் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டன. இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் முடங்கிவிடும். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். எனவே, நூல்களின் விலை உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சுங்க கட்டணம், சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய மாநில அரசுகள், அதனை மக்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம். மக்கள் மீது அக்கறை இல்லாத இந்த மத்திய மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறேன். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகள் இதுவரை செவிசாய்க்கவில்லை. ஏழை நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றில் அடிக்கும் அனைத்து விலைவாசிகள் உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.