மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்...!

பழங்குடியின மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-04-02 09:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முத்தோரை பாலாடா கிராமத்தில் ஏகலைவா அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தோடர், கோத்தர், இருளர், பனியர், காட்டுநாயக்கர் உள்ளிட்ட பழங்குடியின மாணவ-மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கல்லக்கொரை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 58) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி வகுப்பறையில் பாடம் முடிந்த பின்னர் மாணவிகள் வெளியே வளாகத்துக்கு வந்துள்ளனர்.

அப்போது தலைமை ஆசிரியர் சுப்பிரமணி 12-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியின் கழுத்தில் போட்டு இருந்த துப்பட்டாவை கையால் இழுத்து கழற்றினார். இதனால் மாணவி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

பின்னர், தலைமை ஆசிரியர் துப்பட்டாவை தொட்டு பார்த்து நீ அணிந்திருந்த துப்பட்டா கையால் செய்யப்பட்டதா அல்லது வெளியே கடையில் வாங்கப்பட்டதா என்று கேட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து அந்த மாணவி ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தார்.

அதன் பேரில் ஊட்டி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானரவி மற்றும் போலீசார் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியிடம் அத்துமீறிய தலைமை ஆசிரியர் சுப்பிரமணி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் சுகந்தி பரிமளம் தலைமை ஆசிரியரிடம் துறை ரீதியாக விசாரணை நடத்தினார். இதில் அரசு பள்ளியில் பழங்குடியின மாணவியின் துப்பட்டாவை கழற்றி தகாத முறையில் பேசியது தெரியவந்தது. 

இதைதொடர்ந்து இன்று உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது.

மேலும் செய்திகள்