செல்போன் செயலி மூலம் பணம் பெற மறுப்பு... ஆன்லைன் உணவு நிறுவன ஊழியரை தாக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சென்னை முகப்பேரில் செல்போன் செயலி மூலம் பணம் பெற மறுத்ததால் ஆன்லைன் உணவு நிறுவன ஊழியரை தாக்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க நகர்,
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் பரமேஷ் (வயது 27). ஐ.டி கம்பெனியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அயனம்பாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி (26) என்பவர் உணவு நிறுவனம் சார்பில் பரமேஷ் வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்ததாக தெரிகிறது. அப்போது செல்போனில் ‘போன் பே’ மூலம் பணத்தை ஆன்லைனில் செலுத்துவதாக பரமேஷ் கூறியுள்ளார்.
அதற்கு பாலசுப்பிரமணி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பரமேஷ் ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் பலத்த காயத்துடன் ஆன்லைன் நிறுவன ஊழியரான பாலசுப்ரமணியன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில், நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.