சென்னை விமான நிலையத்தை நாடார் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம்

உள்நாட்டு முனையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் பலகையை வைக்க கோரி சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு நாடார் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-04-01 21:01 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான முனையத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர் பலகையை மீண்டும் வைக்க வேண்டும், விமான நிலைய வளாகத்தில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலையை நிறுவ வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து சென்னை உள்நாட்டு விமான நிலைய ஆணையக செயல் அலுவலகம் முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்து ரமேஷ் தலைமை தாங்கினார். முற்றுகை போராட்டத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், நெல்லை- தூத்துக்குடி பரிபாலன நாடார் சங்க தலைவர் பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பங்கேற்றவர்கள்

இதில் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன், ஆலந்தூர் வட்டார நாடார் சங்க தலைவர் பி.கணேசன், திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க தலைவர் வி.செல்வராஜ், க்ஷத்திரிய பாசறை தலைவர் ஆதித்யா சம்பத், தாம்பரம் நாடார் சங்க தலைவர் ஆ.கருணாநிதி, பல்லாவரம் நாடார் சங்க தலைவர் ஆர்.காளிதாஸ், போரூர் வட்டார நாடார் மகமை சங்க நிர்வாகி வி.ஆனந்தராஜ், திருவல்லிக்கேணி நாடார் சங்க தலைவர் கே.சி.ராஜா, அ.இ.வ. பேரமைப்பு தலைவர் புழல் தர்மராஜ், பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ஆ.இரா.இராவணன் இராமசாமி, தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் கு.சிவாஜிராஜன், காமராஜர் ஆதித்தனார் கழக சென்னை மண்டல தலைவர் பால்பாண்டியன், சேலையூர் நாடார் சங்க தலைவர் காந்தி எஸ்.சேகர், கல்வி கண் திறந்த காமராஜர் நற்பணி இயக்க தலைவர் ரஸ்னா ராமச்சந்திரன், காமராஜர் வம்ச பேரவை தலைவர் பெர்னட் ஜான்சன், மாடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் எஸ்.அந்தோணி, தமிழ்நாடு நாடார் சங்க பொது செயலாளர் வி.எஸ்.சி.ரவி, பொருளாளர் ஆடிட்டர் சிவராஜ், அமைப்பாளர் மார்க்கெட் ராஜா, காப்பாளர் வீரகுமார், கொள்கை பரப்பு செயலாளர் பாஸ்கர், பொன்ராஜ், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி பொது செயலாளர் சுரேஷ் மாறன், ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனு

பின்னர் நாடார் சங்க முக்கிய நிர்வாகிகள் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்த மனு இந்திய விமான நிலைய ஆணையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என இயக்குனர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் பேசும்போது, ‘கடந்த 1990-ம் ஆண்டு வி.பி.சிங் பிரதமராக இருக்கும் போது அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு காமராஜர் பெயரும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அறிஞர் அண்ணா பெயரும் சூட்டப்பட்டது. தற்போது சென்னை விமான நிலையத்தில் காமராஜர், அண்ணா பெயர்கள் இல்லை. எனவே உடனடியாக சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் காமராஜர் பெயர் பலகை மற்றும் திருவுருவ சிலையை வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அதே போல் சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் நாடார் சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் இணைத்து மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தை மே 20-ந் தேதி நடத்துவோம்’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்