நாகை பாரதிதாசன் கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
நாகையில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்,
நாகை பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் இன்று வகுப்பை புறக்கணித்து விட்டு, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், தேர்வு கட்டணம், பருவ கட்டணம், மதிப்பெண் பட்டியல் பெறுவதற்கான கட்டணம், மாற்றுச் சான்றிதழ் கட்டணம், பட்டம் பெறுவதற்கான கட்டணம் உள்ளிட்ட கல்வி கட்டணங்களை இரு மடங்காக உயர்த்திய பல்கலை கழகத்தை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த வெளிப்பாளையம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். நாகையில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.