வீடு புகுந்து கைக்குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி நகை-பணம் கொள்ளை - முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
வேதாரண்யம் அருகே வீடு புகுந்து கைக்குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி 33½ பவுன் நகைகள், ரூ.2 லட்சத்தை முகமூடி கொள்ளையர்கள், கொள்ளையடித்து சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் வசிப்பவர் பன்னீர் செல்வம்(வயது 80) விவசாயி. இவரது மனைவி திலகவதி(58). இவர்களது மகள் மதுபாலா(28). பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு வந்த மதுபாலாவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர் மதுபாலா இங்கேயே தங்கி உள்ளார்.
நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவில் பன்னீர்செல்வம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு ஆயுதங்களுடன் 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் கண்விழித்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் 4 மர்ம நபர்கள் முகமூடியுடன் இருப்பதை பார்த்து அவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அந்த முகமூடி கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த மதுபாலாவின் கைக்குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு வீட்டில் இருக்கும் நகைகள் அனைத்தையும் எடுத்து கொடுங்கள் என்று மிரட்டினர். நகைகளை தராவிட்டால் குழந்தையை கொன்று விடுவோம் என்றும் முகமூடி கொள்ளையர்கள் கூறினர். இதனால் வேறுவழியின்றி பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பரிதவித்தனர்.
உடனே முகமூடி கொள்ளையர்கள், அவர்களாகவே வீட்டின் பீரோவில் இருந்த 33½ பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்து சென்ற பின்னர் பன்னீர்செல்வம் குடும்பத்தினர் சத்தம் போட்டனர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போதுதான் பன்னீர்செல்வம் வீட்டுக்கு முகமூடி கொள்ளையர்கள் வந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டுக்கு கைரோகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘ரியோ’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வீடு புகுந்து கைக்குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி 33½ பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ஆகியவற்றை முகமூடி கொள்ளையர்கள், கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.