சட்டசபை 6-ந் தேதி தொடங்கி மே 10-ந் தேதி வரை நடைபெறும் சபாநாயகர் அறிவிப்பு

மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக தமிழக சட்டசபை வருகிற (ஏப்ரல்) 6-ந் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் மே 10-ந் தேதி வரை 22 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

Update: 2022-03-30 23:43 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 18-ந் தேதி பொது நிதிநிலை அறிக்கையும் (பட்ஜெட்), 19-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 24-ந் தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மவுலானா, பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு துறைகளின் மானிய கோரிக்கைக்காக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் தேதிகளை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

நெடுஞ்சாலைத்துறை

ஏப்ரல் 6-ந் தேதி - நீர்வளத்துறை; 7-ந் தேதி - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை;

8-ந் தேதி - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு; (9 மற்றும் 10-ந் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை) ; 11-ந் தேதி - உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை;

12-ந் தேதி - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித் துறை (கட்டிடங்கள்) ; 13-ந் தேதி - வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளம்;

(14-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு, 15-ந் தேதி புனித வெள்ளி, 16 மற்றும் 17-ந் தேதி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள்) ;

18-ந் தேதி - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு; 19-ந்தேதி - நீதி நிர்வாகம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு;

எரிசக்தித்துறை

20-ந் தேதி - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை; 21-ந் தேதி - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை;

22-ந் தேதி - பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை; (23 மற்றும் 24-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை) ;

25-ந் தேதி - வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை; 26-ந் தேதி - எரிசக்தித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை;

27-ந் தேதி - தொழில் துறை, தமிழ் வளர்ச்சி; 28-ந் தேதி - கைத்தறி மற்றும் துணிநூல், கதர், கிராமத்தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்கள்; வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு;

காவல் துறை

29-ந் தேதி - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை; (ஏப்ரல் 30, மே 1-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை; மே 2-ந் தேதி சட்டசபை கூட்டம் கிடையாது; மே 3-ந் தேதி - ரம்ஜான்) ;

4-ந் தேதி - இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள், நிர்வாகம், போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை; 5-ந் தேதி - இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலா, கலை மற்றும் பண்பாடு;

6-ந் தேதி - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை; 7-ந் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் (8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை) ; 9-ந் தேதி - காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத்துறை, ஓய்வூதியங்களும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்;

10-ந் தேதி - பொதுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, அரசினர் சட்ட மசோதாக்களை ஆய்வு செய்து நிறைவேற்றுவது. அனைத்து நாட்களிலும் காலை 10 மணிக்கு சட்டசபை கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேரலை ஒளிபரப்பு

அதைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-

அரசு துறைகளின் மானிய கோரிக்கைகள் ஏப்ரல் 6-ந் தேதியில் இருந்து நடைபெறவுள்ளன. எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானியக் கோரிக்கை நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய எனது தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு ஏப்ரல் 6-ந் தேதி முதல் மே 10-ந் தேதிவரை (22 நாட்கள்) மானியக் கோரிக்கைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணி வரை மானிய கோரிக்கைகள் நடத்தப்படும்.

வழக்கம் போல் கேள்வி நேரம் உண்டு. கேள்வி நேரம் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும். கேள்வி நேரத்திற்கு பின்புள்ள நிகழ்வுகளை தற்போது நேரலை ஒளிபரப்பு செய்யவில்லை. கேள்வி நேரத்திற்கு பிறகு அவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் ஏதாவது அறிவிப்பை வெளியிட்டால், அதுவும் அதுவரை நேரலை ஒளிபரப்பில் இருக்கும்.

புதிய சட்டசபை

அதுபோல பதிலுரைகளும் நேரலையில் வரும். சட்டசபை கூட்டத்தொடரின் நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுமா? என்றால், அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. படிப்படியாக அது நடைமுறைப்படுத்தப்படும். தி.மு.க.தான் அதற்கான உறுதிமொழியை அளித்திருந்தது. ஆட்சியில் இருக்கும் நிலையில் அந்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சொன்னபடி 100 சதவீதம் நடைபெறும்.

சட்டசபை நிகழ்ச்சிகள் நடக்கும்போது உணவு இடைவெளியெல்லாம் இருக்காது. கவர்னரிடம் நிலுவையில் இருக்கும் 19 சட்ட மசோதாக்கள் பற்றிய தகவல்களை கேட்கிறீர்கள். என்னிடம் கேட்பதைவிட அதை சென்னையில் உள்ள கவர்னரிடமே கேட்கலாம். இன்றுகூட, கால்நடைத் துறை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கவர்னர் வந்துள்ளார். முழு விவரத்துடன் அதை நீங்கள் கேட்கலாம். நாங்கள் அதை சட்டசபையில் நிறைவேற்றி, சட்டத்துறை மூலம் கவர்னருக்கு அனுப்பி வைத்துவிட்டோம். அது அவரிடம் போய்விட்டது.

இங்குள்ள சட்டசபையில் உணவகம் அமைப்பதற்கு இடமில்லை. அதற்காகத்தான் நல்ல இடவசதியுடன் கூடிய இடத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கட்டினார். அந்த வரலாறை நான் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. இப்போதிருக்கும் இடத்தில் சந்தோஷமாக சபையை நடத்துகிறோம். ஏற்கனவே கட்டப்பட்டுள்ள புதிய சட்டசபை வளாகத்திற்கு மாற்ற ஏற்பாடு நடக்கிறதா? என்று கேட்டால், அதுபற்றி அமைச்சரவைதான் முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்