கழிவறையில் கேட்பாரற்று கிடந்தது: குவைத் விமானத்தில் ரூ.38¼ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய குவைத் விமானத்தின் கழிவறையில் இருந்து ரூ.38¼ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-30 22:14 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது குவைத்தில் இருந்து பன்னாட்டு விமானமாக வந்து உள்நாட்டு விமானமாக செல்ல இருந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் ஏறி சோதனை செய்தனர். விமான கழிவறையில் கேட்பாரற்று கிடந்த பார்சலை பிரித்து பார்த்த போது, 8 தங்க கட்டிகள் இருந்தன. இதையடுத்து, ரூ.38 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதை கடத்தி வந்தது யார்? விமான கழிவறையில் மறைத்து வைத்து சென்றது ஏன்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு பணம் பறிமுதல்

அதேபோல், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலங்கை, துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 4 பேர் துபாயிக்கும் ஒருவர் கொழும்பிற்கு செல்ல தயாராக இருந்த நிலையில், 5 பேரையும் சந்தேகத்தில் அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது, கைக்பைகளில் இருந்த ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், யூரோ கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையடுத்து, 5 பேரிடம் இருந்து ரூ.34 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 5 பேரையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்