கட்சி கொடி கம்பங்கள் திடீர் அகற்றம் தி மு க அ தி மு க தனித்தனியே சாலைமறியலால் பரபரப்பு

தி.மு.க, அ.தி.மு.க. கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து அக் கட்சியினர் தனித்தனியாக சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-30 16:32 GMT
புதுச்சேரி
தி.மு.க, அ.தி.மு.க. கொடி கம்பங்கள் அகற்றப்பட்டதை கண்டித்து     அக் கட்சியினர் தனித்தனியாக   சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொடி கம்பங்கள் அகற்றம்

புதுவை நெல்லித்தோப்பு சக்தி நகர் பகுதியில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கம்பங்கள் பொதுமக்களுக்கு    இடை யூறாக இருப்பதாக புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பேரில் தி.மு.க., அ.தி. மு.க. கொடி   கம்பங்களை நகராட்சி அதிகாரிகள்  திடீரென அகற்றினர்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் தலைமையில் அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அவர்கள், அகற்றப்பட்ட கொடி கம்பத்தை பழைய கலெக்டர் அலுவலகம் அருகே சாலையில் வைத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில இணை செயலாளர் காசிநாதன், துணை செயலாளர்கள் நாகமணி, கணேசன் மற்றும் வெங்கடேசன், கமல்தாஸ், கோபால், புகழ்பாரி, முருகன், பிரபு, தம்பா, அறிவு, காலா, ரமேஷ், நாக. லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கொடி கம்பத்தை அகற்றிய நகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

தி.மு.க.வினர் மறியல்

இதேபோல் தி.முக கொடி கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து     எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் நெல்லித்தோப்பு தொகுதி பொறுப்பாளர்     கார்த்தி கேயன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன், தொகுதி செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் அதே பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த புதுவை தாசில்தார் குமரன், உழவர்கரை தாசில்தார் ராஜேஷ் கண்ணா, போலீஸ் சூப்பிரண்டு பக்தவத்சலம், கோரிமேடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட தி.மு.க., அ.தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதில், அகற்றப்பட்ட கொடி கம்பங்களை அங்கேயே அமைத்துத் தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையேற்று தி.மு.க., அ.திமு.க. நிர்வாகிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்கள் வாக்குவாதம்

அ.தி.மு.க., தி.மு.க.வினர் ஒரே நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள், மதிய நேரத்தில் சாலை மறியலில் ஈடுபடலாமா? என கேட்டு   அரசியல்  கட்சியி னரிடம் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகள்