கழிவுநீரை சுத்திகரித்து பாசனத்துக்கு வழங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கழிவுநீரை சுத்திகரித்து பாசனத்துக்கு வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-03-30 13:00 GMT
தேனி,

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவுநீர் ஆற்றில் கலந்து வருகிறது. இந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து முல்லைப்பெரியாற்றில் விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஆங்கூர்பாளையம் அருகில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விடுவதற்கு பதில் அதை விவசாய பாசனத்துக்கு கொடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், மஞ்சகுளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று வந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் அன்பழகனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "கூடலூர் நகராட்சியில் கழிவுநீரை சுத்திகரித்தபின்னர் அந்த நீரை ஆற்றில் கலக்காமல், ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம் செல்லும் முல்லைப்பெரியாறு சிறு வாய்க்காலில் பாசனத்துக்கு அனுப்ப வேண்டும். 

அவ்வாறு சிறு வாய்க்காலில் அனுப்பினால் அந்த நீரை பயன்படுத்தி ஆடு, மாடுகள், விவசாயம் பெருகி, ஆங்கூர்பாளையம், சாமாண்டிபுரம், மஞ்சகுளம் ஆகிய 3 கிராமங்களும் வளர்ச்சி அடையும். இதன் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். எனவே, இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்