பள்ளி வளாகத்தில் மாணவன் உயிரிழந்த விவகாரம்: பள்ளி நிர்வாகம் பதில்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பிய நோட்டீசுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை வளசரவாக்கம் அருகே உள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை பள்ளியின் வேன் மோதியதில் தீக்சித் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை கைது செய்த காவல்துறையினர் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, மாணவர்களை வேனிலிருந்து இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஊழியர் ஞானசக்தி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆறு கேள்விகளை எழுப்பிய சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், 24 மணி நேரத்திற்குள் இது குறித்து விளக்கம் தர வேண்டும் என்று பள்ளி பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமான பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த அறிக்கையை மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் கருப்பசாமியிடம் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில், பள்ளி நிர்வாகம் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பாக, பல ஆண்டுகளாக பள்ளியை நடத்திவந்த போதும் இந்தமாதிரியான சம்பவம் முன்பு நடந்ததில்லை. தற்போது எதிர்பாராதவிதமாக இந்த சம்பவம் நடந்துவிட்டது. இது தங்களுக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாக அறிக்கையில் பள்ளி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக அமைச்சருடன் கலந்து ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.