ரூ.610 கோடிக்கெல்லாம் நான் வொர்த் இல்லை...! - ஆயிரம் நோட்டீசை சந்திக்க தயார் - அண்ணாமலை

ஆயிரம் நோட்டீசை சந்திக்க தயார். மிரட்டுங்கள் பார்க்கலாம். மிரட்டலில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2022-03-29 09:51 GMT

சென்னை

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக தி.மு.க அரசு மீது குறசாட்டுகளை கூறி வருகிறார். இதனை எதிர்த்து அவர் மீது பி.ஜி.ஆர் நிறுவனம்  500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல், தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் தொடர்பாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆர்.எஸ்.பாரதி,  ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில் இன்று அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. போல கோழைத்தனமாக கண்டன நோட்டீஸ் கொடுப்பதல்லாம் எங்களுக்கு வராது. திமுக எம்.பி., வில்சன் என் மீது ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனவே, பி.ஜி.ஆர் நிறுவனம் ரூ.500 கோடி, ஆர்.எஸ்.பாரதி ரூ.100 கோடி, வில்சன் ரூ.10 கோடி என மொத்தம் ரூ.610 கோடி. 

என்னிடம் இரண்டு டப்பா, ஊரில் ஆடுகள், மாடுகள் உள்ளது; இதை வேண்டுமானால் பிடித்துக்கொண்டு போங்கள். ஒரு சாதாரண மனிதனை மதித்து 610 கோடி ரூபாய் கேட்கின்றனர். அதற்கு நான் வொர்த் இல்லை. முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். அடுத்த 6 மணி நேரம் கட்சி அலுவலகத்தில் தான் இருப்பேன். முடிந்தால் கைது செய்யுங்கள்.

ஆயிரம் நோட்டீசை சந்திக்க தயார். மிரட்டுங்கள் பார்க்கலாம். மிரட்டலில் யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்ப்போம் என கூறினார்.

மேலும் செய்திகள்