தமிழக மீனவர்களை மிரட்டி ரூ.1 லட்சம் பொருட்களை கொள்ளையடித்து சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்

தமிழக மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-03-28 19:46 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சோ்ந்த 3 படகுகளில் நேற்றுமுன்தினம் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நாகை மாவட்ட மீனவர்களின் படகுகளை மறித்தனர்.

பின்னர் கடற்கொள்ளையர்கள் 2 பேர் கத்தியுடன் மீனவர்களின் படகில் ஏறி அவர்களை மிரட்டி அங்கிருந்த வாக்கி-டாக்கி, ஜி.பி.எஸ். கருவி, பேட்டரி, செல்போன், பாராசூட் ஆங்கர், டார்ச்லைட், தார்ப்பாய், சிக்னல் லைட், உணவு பொருட்கள், மீன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

ரூ.1 லட்சம் பொருட்கள்

இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று காலை காரைக்கு திரும்பிய மீனவர்கள். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்திலும், மீன்வளத்துறை அலுவலகத்திலும் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்த வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளையடிப்பது தற்போது அதிகளவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்