விவசாயிகள் சாலை மறியல் 90 பேர் கைது

கிளியனூர், கண்டமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-28 18:12 GMT
மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வானூர் வட்டக் குழு சார்பில் கிளியனூர் மெயின் ரோட்டில் விவசாயிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் மாசிலாமணி முன்னிலை வகித்தார்.
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் சகாபுதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் தனுசு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சபாபதி, கந்தன், ஜெயராமன், கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல் கண்டமங்கலத்தில் சி.ஐ.டி.யு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 30 பேரை கண்டமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்