உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி
புதுவை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
புதுவை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
என்.ஆர்.காங்- பா.ஜ.க. கூட்டணி
கடந்த ஆண்டு நடந்த புதுவை சட்டமன்ற தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து சந்தித்தன. இதில் தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக தொடக்கத்திலேயே கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டது.
இறுதியாக என்.ஆர்.காங்கிரஸ் 16, பா.ஜ.க. 9, அ.தி.மு.க. 5 இடங்கள் என உடன்பாடு செய்து கொண்டு தேர்தலை சந்தித்தன. அதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. அ.தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
முதன்மையான கட்சி
தேர்தல் வெற்றியை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அரசு அமைந்தது. இந்த அரசில் அமைச்சரவையில் சரிபாதி இடத்தை கேட்டு பா.ஜ.க. பிடிவாதம் செய்தது. அதிலும் ஒரு பதவியை துணை முதல்-அமைச்சராக தரவேண்டும் என்று வலியுறுத்தியது.
ஆனால் அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சம்மதிக்கவில்லை. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர் பதவிகளை மட்டும் வழங்கினார். இதற்கிடையே பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.
இதுதவிர 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர்.ஆக 12 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் செயல்பட்டு வரும் பா.ஜ.க. புதுவையில் தாங்கள்தான் முதன்மையான கட்சி என்று கூறி வருகிறது.
வாரிய தலைவர்
மேலும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஆட்சி அமைந்ததும் பதவிகள் தருவதாக கூறி 30 தொகுதிகளிலும் உள்ள பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை பா.ஜ.க. வளைத்துப் போட்டது. அவர்கள் தங்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
ஆனால் புதிய அரசு அமைந்து 10 மாதங்கள் ஆன நிலையில் வாரிய தலைவர் பதவிகூட நிரப்பப்படவில்லை. பலமுறை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேரில் வலியுறுத்தியபோதிலும், பா.ஜ.க. மேலிடம் கூறியும் ரங்கசாமி இன்னும் ஒப்புதல் தரவில்லை.
அடுக்கடுக்கான புகார்
இதுதொடர்பாக ரங்கசாமி மீது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி மேலிடத்தில் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் புதுவை வந்த பா.ஜ.க. அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜியிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமி மீது அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் வர உள்ள நிலையில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இதேகருத்து மேலிட பார்வையாளரான நிர்மல்குமார் சுரானாவிடமும் வலியுறுத்தப்பட்டது. தனித்து போட்டியிட்டால்தான் கட்சியை பலப்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
தனித்து போட்டி
இதையெல்லாம் கேட்டுக்கொண்ட நிர்மல்குமார் சுரானா உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து மேலிடத்தில் ஆலோசனை பெற்று முடிவு செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. நிர்வாகிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறியதாவது:-
புதுவை உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களும், கட்சி நிர்வாகிகளும் வலியுறுத்தி உள்ளனர். அப்படி போட்டியிட்டால்தான் கட்சி வளர்ச்சி பெறும்.
அதேநேரத்தில் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். அதேபோல் புதுச்சேரியிலும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ளோம்.
இவ்வாறு சாமிநாதன் கூறினார்.